நாய்த்தொல்லையால் தெருக்களில் நடமாட பொதுமக்கள் அச்சம்

ஆம்பூரில் அதிகரித்து வரும் நாய்த்தொல்லையால் பொதுமக்கள் நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2017-07-19 21:00 GMT

ஆம்பூர்,

ஆம்பூரில் அதிகரித்து வரும் நாய்த்தொல்லையால் பொதுமக்கள் நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் தெருநாய்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் நாய்களுக்கு வெறிபிடித்து தெருக்களில் செல்லும் அனைவரையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வேலை விட்டு வீட்டுக்கு செல்லும் தொழிலாளர்களையும், பெண் களையும் நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது.

ஆம்பூர் நகர பகுதியில் மட்டும் கடந்த சில மாதங்களில் நாய்கள் கடித்து கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் ஆம்பூர் வாத்திமனை, ஜலால்ரோடு, மோட்டுக்கொல்லை, ஏ.கஸ்பா ஆகிய பகுதியில் கடந்த சில நாட்களாக 10–க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது.

அந்த நாய்கள் தெருக்களில் நடமாடும் சிறுவர், சிறுமிகளை துரத்துகிறது. பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் பயந்து கொண்டே பள்ளிக்கூடம் செல்லும் நிலை உள்ளது. மேலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுவதால் பொதுமக்கள் தெருவில் நடமாட முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும், நகராட்சி சார்பில் நாய்களை பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆம்பூர் நகரில் நாளுக்குநாள் நாய்த்தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே நாய்த்தொல்லையில் இருந்து மக்களை காக்க தெருக்களில் சுற்றிதிரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்