தென்மும்பையில், கட்டிட வளாகத்தில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
தென்மும்பையில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
மும்பை,
தென்மும்பையில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.எஸ். தம்பதி மகன்மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடாவில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மிலிந்த் மாஸ்கர். இவரது மனைவி மனிஷாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மாநில நகர மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக உள்ளார். இவர்கள் மெரின்லைன்ஸ் பகுதியில் உள்ள பெல் ஹெவன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் மன்மத் (வயது 18). இவர் நேற்று காலை 7 மணியளவில் நண்பரை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார்.
ரத்த வெள்ளத்தில் மீட்புஇந்தநிலையில் நேப்பியன் சீ ரோடு பகுதியில் உள்ள தார்யா மகால் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மலபார்ஹில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணைஇதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் ஐ.ஏ.எஸ். தம்பதி மகன் மன்மத் என்பது தெரியவந்தது. இவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மலபார்ஹில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்மத் 12–ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது கல்லூரியில் சேர இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். தம்பதி மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தென்மும்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.