ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின் பொருட்கள் விலை குறைந்துள்ளது வணிக வரித்துறை தகவல்

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின் பொருட்கள் விலை குறைந்துள்ளதாகவும், பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வணிக வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2017-07-18 22:30 GMT
புதுச்சேரி, 

புதுவை வணிகவரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டாய பதிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வருடத்திற்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யும் வணிகர்கள் மட்டுமே கட்டாயமாக பதிவு பெறவேண்டும். ரூ.20 லட்சத்திற்குள் விற்பனை செய்யும் வணிகர்கள் பதிவுபெற வேண்டிய அவசியமில்லை. விருப்பப்பட்டால் அவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் வருடத்திற்கு ரூ.75 லட்சத்திற்குள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளுக்கான இணக்கவரி திட்டத்தின்கீழ் உணவகங்கள், 5 சதவீதவரி, உற்பத்தியாளர்கள் 2 சதவீத வரி, இதர வணிகர்கள் ஒரு சதவீத வரி என்ற குறைக்கப்பட்ட வரி விகிதத்தில் வரி செலுத்திடவும், 3 மாதத்திற்கு ஒருமுறை விவர படிவங்களை தாக்கல் செய்யவும், வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறைந்த வரி விகிதத்தில் வரி செலுத்துவதினால் அவர்களுக்கு உள்ளட்டு வரிவரவு கிடையாது.

விலை குறைந்தது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பெரும்பாலான நுகர் பொருட்கள், வாகனங்கள், மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களின் விலை குறைந்து காணப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என ஒரு ஆதாரமற்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய ஜி.எஸ்.டி. வரி முந்தைய வரி விதிப்பை விட குறைவானதாகவோ அல்லது சமமானதாகவோதான் இருக்கும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் ஒரு பொருள் உற்பத்தியாகி அது நுகர்வோர் கையில் சென்றடையும்போது அதன்மேல் விதிக்கப்படும் வரியானது முந்தைய வரிவிதிப்பைவிட குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பெரும்பாலும் விலை குறைந்து இருப்பதை காணமுடிகிறது.

அதேபோல் பற்பசை, சோப், டிடெர்ஜெண்ட் பவுடர், பிளாஸ்டிக் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பல பொருட்கள் விலை குறைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜி.எஸ்.டி-க்கு முந்தைய வரிவிதிப்பில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டின் அடிப்படை விலை ரூ.100 ஆக இருக்கும்பட்சத்தில் அதன் மீதான கலால் வரி 6 சதவீதம் விதிக்கப்பட்டது.

ஆகவே அந்த பொருளின் அடக்கவிலை ரூ.106 ஆக இருந்தது. அதன்மீது வாட் வரியாக 14.5 சதவீதம் விற்பனையின்போது விதிக்கப்பட்டது. ஆதலால் நுகர்வோர் அப்பொருளை ரூ.121.37 கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. அதே பொருளானது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் வரும்போது அதன் அடிப்படை விலை ரூ.100 ஆக இருக்கும்போது அதன்மீது 18 சதவீதம் வரி விதிக்கப்படுவதால் அதன்விலை ரூ.118 ஆக இருக்கும். அந்த பொருளின் இறுதி விலையில் ரூ.3.37 குறைந்துள்ளது.

வதந்திகளை நம்பவேண்டாம்

இதேபோல் ஏனைய பொருட்களின் விலை குறையும்போது உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் அந்த பொருட்களின் விலையை மாற்றியமைத்து, பழைய விலையை மறைக்காமல் புதிய விலையையும் காண்பிக்கவேண்டும். ஆகவே பொதுமக்களும், நுகர்வோரும் விலை உயர்வு பற்றி பரப்பப்படும் பொய்யான வதந்திகளை நம்பத்தேவையில்லை.

மேலும் எந்த ஒரு பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி விதிப்புமுறை, அவற்றுக்குண்டான வரி விகிதங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பொதுமக்களும், வணிகர்களும் வணிக வரித்துறையை அணுகி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்