உடையார்பாளையம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

உடையார்பாளையம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-18 22:15 GMT
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க அரசு முன்வராமல், தொடர்ந்து அப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானவர்கள் திரண்டு சுத்தமல்லி- அரியலூர் சாலையில் அமர்ந்து நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உடையார்பாளையம் போலீசார் அங்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் நாள் முழுவதும் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டாஸ்மாக் கடையும் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு, அந்த கடை முன்பு 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரியலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன் மற்றும் உடையார்பாளையம் போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஒரு வார காலத்திற்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக தருகிறோம் என்று அவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் உடனடியாக டாஸ்மாக் கடை அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். போராட்டத்தால் நேற்றும் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகாரிகள் தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தை எங்களுக்கு உடன்பாடாக இல்லை. டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம், என்றனர்.

மேலும் செய்திகள்