மீன் பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த சட்ட நகலை கிழித்து மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த சட்ட நகலை கிழித்து கடலூர் முதுநகரில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கடலூர் முதுநகர்,
தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 2016–யை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் இந்த திருத்த சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் கடலூர் முதுநகர் மணிகுண்டு அருகில் ஒன்று திரண்டனர்.
தொடர்ந்து அவர்கள் தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில துணை தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அரசப்பன், அல்லிமுத்து, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் கருப்பையன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பாஸ்கரன், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கந்தன், மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில் மீனவ மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும். மீன்பிடி தடை கால நிவாரணமாக மீனவர் அனைவருக்கும் 2 மாதத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மீன்பிடி துறைமுகங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மீன்பிடி தொழிலாளர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் ஆளவந்தார், ரமேஷ்பாபு, சுப்புராயன், முரளி, சுப்புராயன், சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.