கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு அடுத்த பட்ரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது 55). தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்களான கிருஷ்ணன்(50) மற்றும் சுந்தரம்(40) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாலூர் கிராமத்துக்கு வந்தார்.
அங்கிருந்து அருகில் உள்ள வேப்பஞ்சேரி கிராமத்துக்கு மதுராந்தகம்-கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டர் சைக்கிளை சுந்தரம் ஓட்டினார்.
தொழிலாளி பலி
கல்பாக்கம் அருகே தட்டாம்பட்டு கிராம வளைவில் சென்ற போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கஜேந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவருடைய நண்பர்களான சுந்தரம், கிருஷ்ணன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான கஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.