தனி மணல் குவாரி அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

தனி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-17 22:15 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

அப்போது அவர்கள் கலெக்டர் சுப்பிரமணியனிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி 2013–ம் ஆண்டு முதல் பலமுறை மனு கொடுத்து போராடி வருகிறோம். 2014–ம் ஆண்டில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முதல்கட்டமாக 5 இடங்களில் மாட்டு வண்டிக்கென தனி மணல் குவாரி அமைத்து தருவதாக எழுத்து மூலமாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரையிலும் தனி குவாரி அமைக்கப்படவில்லை. ஆகவே தாங்கள் இதில் தலையிட்டு மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தனி மணல் குவாரி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதனை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்