பெரியபாளையம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை கணவர்-மாமியார் கைது

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-17 21:45 GMT
பெரியபாளையம்,

பெரியபாளையம் அருகே உள்ள வேளகாபுரம் பள்ள காலனியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(வயது 32). விவசாயி. இவர், அதே ஊரைச் சேர்ந்த மணி(46) என்பவரின் மகள் லாவண்யாவை(30) காதலித்து, கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 12 வயதில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 11 வயதில் 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சக்கரவர்த்திக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை லாவண்யா கண்டித்தார். ஆனாலும் அவர், அந்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்தவில்லை.

தீக்குளித்தார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணுடன் சக்கரவர்த்தி உல்லாசமாக இருப்பதை லாவண்யா நேரில் பார்த்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லாவண்யா, தனது கணவருடன் இருந்த பெண்ணை நடுத்தெருவில் நிற்க வைத்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதை அறிந்த சக்கரவர்த்தியின் உறவினர்கள் அவரை கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர், தனது காதல் மனைவி லாவண்யாவை அடித்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த லாவண்யா, அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலையில் லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் லாவண்யாவின் தந்தை மணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரவர்த்தி மற்றும் அவருடைய தாய் வசந்தா(60) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்