டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு, கலெக்டரிடம் மனு

நம்பியூர் சந்தனநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரித்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-07-17 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

நம்பியூர் பேரூராட்சியில் உள்ள ராஜீவ்காந்தி நகர், சந்தனநகர், சத்தியா நகர், ஆண்டிக்காடு, காரக்காடு, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நம்பியூர் பேரூராட்சியில் மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கோவில் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. தற்போது சந்தனநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் மாணவ–மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே சந்தனநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை டாஸ்மாக் அதிகாரிகள் கைவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

கோபி அருகே உள்ள குள்ளநாயக்கனூர் பகுதியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

சென்னிமலை பசுவப்பட்டி பகுதியை சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த திருநங்கை இளமதி என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனது அண்ணன் நாராயணசாமி, எனது தந்தை வழி சொத்துகளை அபகரித்துக்கொண்டு எனக்கு தர மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய சொத்துகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

அந்தியூர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘அந்தியூர், ஜெ.ஜெ.நகர், ஜீவா செட் காலனி, வெள்ளித்திருப்பூர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான மயான பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் தொடர்ந்து அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்து முன்னணி கிளைத்தலைவர் நடராஜ் கொடுத்திருந்த மனுவில், ‘பெருந்துறை அருகே உள்ள கருக்குப்பாளையம் கல்லாங்காட்டு வலசு பகுதியில் பால் பன்னீர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறி இருந்தார்.

பாரதீய ஜனதா கட்சி மாவட்ட ஆன்மிக பிரிவு தலைவர் ராஜாளிநஞ்சப்பன் கொடுத்திருந்த மனுவில், ‘பவானி காடையாம்பட்டி குளத்தில் இருந்து வெளியேறும் நீர் பவானி ஆற்றில் கலக்கும் இடத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். எனவே நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய ஓய்வூதியதாரர்கள் 7 பேருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.84 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்