க.பரதூரில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்

க.பரதூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 45 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-07-16 21:32 GMT

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள க.பரதூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி நடுத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 450–க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் மேலப்பழுவூரை சேர்ந்த சேகர் (வயது 42), சாத்தமங்கலத்தை சேர்ந்த விக்கி (18), கலியன் (48), மால்வாய் கிராமத்தை சேர்ந்த ஜெயபாபு (40), குமுழுரை சேர்ந்த பரமசிவம் (40), திருமானூரை சேர்ந்த இளையராஜா (27), பழனிசாமி (40), விக்னேஷ் (30) உள்பட 45 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த சேகர், விக்கி, கலியன், ஜெயபாபு ஆகிய 4 பேரையும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயமடைந்தவர்கள் திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் க.பரதூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்