நடிகர்களை நம்பி தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரமுடியாது

நடிகர்களை நம்பி தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரமுடியாது என்று காங்கேயத்தில் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

Update: 2017-07-16 22:00 GMT

காங்கேயம்,

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைத்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம், காங்கேயத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், காங்கேயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், முத்தூர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுசாமி, மாநில துணை செயலாளர் சக்தி கோச்நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘நீட்‘ தேர்வு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசு பெயரளவுக்கு நீதி மன்றத்திற்கு சென்று, இப்போது அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு மேல்முறையிடு செய்வோம் என்ற நிலையில் தமிழக அரசு இருக்கிறது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு போட்டி போட்டு கொண்டு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க. அணிகள் ‘நீட்‘ தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏன் நிபந்தனை விதிக்கவில்லை.

பாரதீய ஜனதா கட்சி அ.தி.மு.க. வின் தோளிலே ஏறிக்கொள்ளலாமா? நடிகர் ரஜினி காந்த் தோளிலியே ஏறிக்கொள்ளலாமா? அல்லது நடிகர் கமல்ஹாசன் தோளிலியே ஏறிக்கொள்ளலாமா? என்று தான் ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள். நடிகர்களை நம்பி ஒரு போதும் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.

தமிழக ஆட்சியாளர்களின் பிடி மத்திய அரசின் கையில் உள்ளது. அதனால்தான் தமிழக ஆட்சியாளர்கள் தடுமாறுகிறார்கள். நிலைமை அப்படியிருக்கும்போது பெயரளவுக்கு கோரிக்கை வைத்து விட்டு அதைப்பற்றி பேசுவதற்கு கூட பயப்படுகிற நிலைதான் இன்றைய ஆட்சியாளர்களின் நிலை இருக்கிறது. இவர்களால் தமிழகத்திற்கு எந்த விதமான நன்மையும் ஏற்படாது. அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் சுய லாபத்திற்காக செய்லபடுகிறார்கள்.

இன்றைக்கு ஆட்சி கவிழ்ந்தால் திரும்ப வெற்றி பெறமுடியாது என்பதை முழுமையாக புரிந்திருக்கிறார்கள். எனவே இருக்கின்றவரை எவ்வளவு லாபம் பார்க்க முடியும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்