குளம் தூர்வாரும் பணியை அதிகாரிகள் தடுத்ததால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஆரல்வாய்மொழி அருகே குளம் தூர்வாரும் பணியை அதிகாரிகள் தடுத்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-16 22:00 GMT

ஆரல்வாய்மொழி

மாதவலாயம் அருகே சகாயநகர் ஊராட்சிக்கு உள்பட்ட அனந்தபத்மநாபபுரத்தில் இருந்து புளியன்விளை செல்லும் சாலையில் ஒரு கலையரங்கம் உள்ளது. இதன் அருகே அரசு இடத்தில் இருந்த பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்கி நின்று தூர்நாற்றம் வீசியது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் கலையரங்கத்தின் அருகாமையில் உள்ள பில்லந்தி குளம் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. இதனால் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் அப்பகுதி மக்கள் பெக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குளத்தை தூர் வாரினர். பின்னர் அந்த மண்ணை அருகில் பாறையை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளத்தில் போட்டு மூடிக்கொண்டு இருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரோசிட்டா மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அரி நைனார்பிள்ளை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளம் தூர்வார அனுமதி பெறவில்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைதொடர்ந்து தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.

உடனே பொதுமக்கள் அதிகாரிகளை மழை நீர் தேங்கி கிடந்த பள்ளத்துக்கு அழைத்து சென்று முறையிட்டனர். ஆனாலும் அதிகாரிகள் குளம் தூர்வார முடியாது என்று கூறினார்.

மனு கொடுத்தால் அவர்களும் சுகாதார கேட்டை தடுக்க முன்வரவில்லை, நாமே முன்வந்து பணியில் ஈடுப்பட்டால் தடுக்கின்றனர் என்று ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் மரியஸ்டெல்லா, ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் கோரிக்கை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்