டிராக்டரை குறுக்கே நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
அனுமதி இல்லாமல் ஏரியில் மண் அள்ள அதிகாரிகள் தடுத்ததால் டிராக்டரை குறுக்கே நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி ஏரியில் விவசாயிகள் சிலர் நேற்று டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டு இருந்தார்கள். வட்டார வளர்ச்சி அதிகாரியின் அனுமதி பெற்று கடந்த 5–ந் தேதி வரை விவசாயிகள் மண் அள்ளிக்கொண்டு இருந்தார்கள். அதன்பின்னர் 6–ந் தேதி முதல் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் அறிவித்தார்.
இந்தநிலையில் முறையாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பூனாட்சி ஏரியில் மண் அள்ளப்படுவதாக அந்தியூர் தாசில்தார் செல்லையாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனே சம்பவ இடத்துக்கு பூனாட்சி கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தத்தை சென்று பார்க்க கூறினார். அதன்படி அவரும் சென்று பார்த்து விசாரணை நடத்தினார். அப்போது முறையாக அனுமதி பெறாமல் விவசாயிகள் மண் அள்ளுவது தெரிந்தது. உடனே அவர்களை மண் அள்ளாமல் கிராம நிர்வாக அதிகாரி வெளியேற சொன்னார். அதன்படி ஏரியில் இருந்து டிராக்டரில் வெளியே வந்த விவசாயிகள் திடீரென அந்தியூர்–அம்மாபேட்டை ரோட்டில் டிராக்டர்களை குறுக்கே நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார், அந்தியூர் வருவாய் ஆய்வாளர் திருமூர்த்தி, மண்டல தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் விவசாயிகள் வைத்திருந்த அனுமதி கடிதத்தை வாங்கி பார்த்தார்கள். அதில் பல கடிதங்கள் வேறு ஏரியில் மண் அள்ள வாங்கப்பட்டு இருந்தது தெரிந்தது.அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளிடம், ‘முறையாக அனுமதி பெற்று வாருங்கள். அதன்பின்னரே மண் அள்ள அனுமதி வழங்கப்படும்‘ என்று கூறினார்கள். முடிவில் அதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.