மணல் கடத்தல்; 8 பேர் கைது
மணல் கடத்தல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த அவளூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசனுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் விரைந்து சென்றார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. அதையொட்டி அவளூரை சேர்ந்த குணசேகரன் (37), ரமேஷ் (35), ரவி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த வில்லிவலம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையொட்டி வாலாஜாபாத் சப்–இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று மாட்டு வண்டியில் மணல் கடத்திய வில்லிவலம் காலனி பகுதியை சேர்ந்த முனியன் (45) என்பவரை கைது செய்தார்.உத்திரமேரூரை அடுத்த மலையாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் விரைந்து சென்று அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய மலையாங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் (29) என்பவரை கைது செய்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை பெத்திக்குப்பம் அருகே நேற்று சப்–இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சுதாகர் (38), சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன்(28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணலுடன் 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.