கார் மரத்தில் மோதி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்

செய்யூர் அருகே கார் மரத்தில் மோதி ஒருவர் இறந்தார். அவரது மனைவியும், டிரைவரும் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-07-15 23:51 GMT

மதுராந்தகம்,

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 74). இவர் தனது மனைவி ரமணி (65), கார் டிரைவர் சிலம்பரசன் (45) ஆகிய 3 பேரும் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.

சுந்தரமூர்த்தியின் மகள் சிங்கப்பூரிலிருந்து சென்னை வருவதால் அவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த முட்டுக்காடு படகு குழாம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை கார் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் சுந்தரமூர்த்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி ரமணி, கார் டிரைவர் சிலம்பரசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செய்யூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். போலீசார் சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்