ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியல்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எம்.வேலம்பாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 33). டிராவல்ஸ் உரிமையாளரான இவர் சொந்தமாக 2 கார்களை வைத்து உள்ளார்.

Update: 2017-07-15 23:30 GMT

ஈரோடு,

தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எம்.வேலம்பாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 33). டிராவல்ஸ் உரிமையாளரான இவர் சொந்தமாக 2 கார்களை வைத்து உள்ளார். இவருடைய மனைவி கனகா (28). இவர்களுக்கு கனிஷ்கா (5) என்கிற மகள் உள்ளாள். பிரபுக்கு பணம் தேவைப்பட்டதால் மோளப்பாளையத்தை சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.14 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரபுவிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

கடனை கொடுத்தவர்கள் பிரபுவிடம் திரும்ப தரும்படி கேட்டு உள்ளனர். கடன் தொல்லையால் தவித்து வந்த பிரபு தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார். நேற்று முன்தினம் மதியம் ஈரோட்டிற்கு வந்த அவர் வ.உ.சி. பூங்காவுக்கு சென்றபோது வி‌ஷம் குடித்துவிட்டார்.

சிறிதுநேரத்தில் வயிற்றில் எரிச்சல் அதிகமாகி உள்ளது. இதனால் வி‌ஷம் அருந்திய பாட்டிலுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் 174–வது பிரிவின் கீழ் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடனை திருப்பிக்கேட்டு கட்டாயப்படுத்தியதால் பிரபு தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர் குற்றம் சாட்டினார்கள். இதனால் பிரபுவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மதியம் 2.30 மணிஅளவில் பிரபுவின் மனைவி, பெற்றோர் உள்பட உறவினர்கள் பலர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு ஈ.வி.என்.ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஈரோடு டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உறவினர்கள் பிரபுவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் பிரபுவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

பிரபுவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈ.வி.என்.ரோடு, எம்.ஜி.ஆர். ரவுண்டானா பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்