சீனாவின் அதிசய ‘வன நகரம்’!

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு அணை போடும் முயற்சியாக, ‘லியுஜோ’ என்ற வன நகரத்தை உருவாக்க சீன அரசு முடிவெடுத்திருக்கிறது.

Update: 2017-07-15 10:16 GMT
தொழில்துறையில் அதிவேக வளர்ச்சி காணும் சீனாவில், அதற்கான விலையாக சுற்றுச்சூழல் மாசுபாட்டுள்ளது.

குறிப்பாக, தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மிக மோசமாக மாசடைந்திருக்கிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு அணை போடும் முயற்சியாக, ‘லியுஜோ’ என்ற வன நகரத்தை உருவாக்க சீன அரசு முடிவெடுத்திருக்கிறது.

மொத்தம் 30 ஆயிரம் பேர் வசிக்கப்போகும் இந்நகரில், 10 லட்சம் தாவரங்கள், 30 ஆயிரம் மரங்கள் இருக்கும். இவை அனைத்தும் இந்த நகரத்தின் கட்டிடங்களில் அமையப்போகின்றன என்பதுதான் விசேஷம்.

இந்த மரங்கள், தாவரங்கள் எல்லாம் சேர்ந்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும், 900 டன் ஆக்சிஜனை வெளியிடும்.

லியுஜோ நகரத்தில் கட்டப்படும் அனைத்துக் கட்டிடங் களின் வெளிப்பக்கங்களிலும் மரங்களும் செடிகளும் அமைய உள்ளன.

அதனால், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டிடங்கள், சமூகநலக் கூடங்கள் அனைத்திலும் மரங்கள் இருக்கும். அதனால் இந்த நகரமே பச்சைப் பசேல் என்றிருக்கும்.

இந்த நகரத்தை ‘ஸ்டெபெனோ போரி ஆர்கிடெட்டி’ என்ற நிறுவனம் உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்கள், செடிகளுடன் கூடிய இயற்கை சார்ந்த கட்டிடங்களை உருவாக்கிய அனுபவம் மிக்கது இந்நிறுவனம்.

இத்தாலியின் மிலன் நகரில் இந்த நிறுவனம் வடிவமைத்த ‘வெர்ட்டிக்கல் பாரஸ்ட் டவர்ஸ்’ என்ற கட்டிடம், 900 மரங்களை கொண்டதாக இருக்கிறது.

ஆனால் முழுக்க முழுக்க மரங்கள், செடிகள் கொண்ட வன நகரம் உருவாக்கப்படுவது இதுதான் முதல்முறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்