ஆளில்லா விமான சோதனை ஓட்டம் வெற்றி
‘அக்யூலா’ என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விமானம், அமெரிக்கா அரிசோனாவில் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் பறந்தது.
தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக பேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கும் ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.
‘அக்யூலா’ என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விமானம், அமெரிக்கா அரிசோனாவில் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் பறந்தது.
கடந்த கோடை காலத்தில் இந்த ஆளில்லா விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, கடுமையான காற்று காரணமாக தானியங்கி ஓட்டுநர் அமைப்பு குழப்பதுக்கு உள்ளாகி, தரையிறங்கும்போது விபத்தைச் சந்தித்தது.
இந்த முறை, ஆளில்லா விமானம் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்தது. இது பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமான 60 ஆயிரம் அடி உயரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
தனது ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பல மாதங்களுக்கு வானில் நிலைநிறுத்த வேண்டும், லேசர் மூலமாக அவற்றுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் வலைத்தளம் பல தீவிரமான திட்டங்களை கொண்டிருக்கிறது.
கடந்த மே மாதம் நடந்து முடிந்துவிட்ட இந்த சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தற் போதுதான் அந்நிறுவனம் அறிவித் திருக்கிறது.
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது போல் அந்நிறுவனம் தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்தாலும், தன்னுடைய ஆளில்லா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாக பின்னர் ஒப்புக்கொண்டது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினால் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்த தகவல் வெளியானது.
இந்த முறை பேஸ்புக் பொறியியல் குழுவினர், ஆளில்லா விமானத்தின் இறக்கைகளின் இழுவைத்திறனை அதிகரிக்கவும், தரையிறங்கும்போது மேல் எழும்பும் திறனை குறைக்கவும் ‘ஸ்பாய்லர்களை’ இணைத்துள்ளனர். மேலும், தானியங்கி ஓட்டுநர் அமைப்பின் மென்பொருளில் சில மாற்றங்களையும், விமானத்திற்கு சற்று மேம்பட்ட நுட்பமான இறுதி வடிவத்தையும் தந்துள்ளனர்.
அந்த அணியினர், ஆளில்லா விமானம் தரையிறங்கும் காட்சிகள் உள்ளடக்கிய வீடியோ ஒன்றை எடுத் துள்ளதோடு, அதைத் தங்கள் வலைப்பதிவிலும் இணைத்துள்ளனர்.
விமான தளங்கள் துறையின் இயக்குநரான மார்ட்டின் லூயிஸ் கோமெஸ் கூறும்போது, சில சிறிய, எளிதில் சரிசெய்யக்கூடிய பிரச்சினைகளால் ஆளில்லா விமானம் பாதிக்கப்பட்டிருந்தது என்றார்.
போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தைக் கொண்டுள்ள ‘அக்யூலா’ ஆளில்லா விமானம், உலகம் முழுவதும் இணைய சேவை அளிக்க வேண்டும் என்ற பேஸ்புக் நிறுவனத்தின் தீவிரமான திட்டங்களில் ஒரு பங்காகும்.
கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் உலக மக்கள்தொகையில் கால் பங்குக்கு மேற்பட்ட பயனாளர்களைக் கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது.