ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை ஜாமீனில் வந்தபோது பயங்கரம்

விருதம்பட்டில் வியாபாரியை தாக்கி ரூ.26 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2017-07-14 23:53 GMT

வேலூர்,

வேலூர் சலவன்பேட்டை பூசணநகர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் கோட்டி என்கிற கோட்டீஸ்வரன் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கோட்டீஸ்வரன் மீது போலீசில் 5–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. விருதம்பட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கிக்கு பணம் கட்ட சென்ற வியாபாரியை போலீஸ் நிலையம் அருகில் தாக்கி ரூ.26 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் கோட்டீஸ்வரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவர் 2 மாதங்களுக்கு முன்புதான் அவர் ஜாமீனில் வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் 2.30½மணியளவில் நண்பர்களுடன் கோட்டீஸ்வரன் மது குடித்துள்ளார். அப்போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். உடனே கோட்டீஸ்வரன் அங்கிருந்து பலவன்சாத்து ஏரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு தனியாக சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.

இந்த நிலையில் நேற்று காலை வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே உள்ள முட்புதரில் கோட்டீஸ்வரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கோட்டீஸ்வரனின் வயிறு மற்றும் மார்பில் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. மேலும் கொலையாளிகள் அவரது கழுத்தையும் கொடூரமாக அறுத்து வேறு எங்கேயோ ஒரு இடத்தில் வைத்து கொலைசெய்து உடலை சுடுகாட்டிற்கு கொண்டுசென்று வீசிவிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கோட்டீஸ்வரனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் குறித்து துப்புதுலக்க மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டது. அது கோட்டீஸ்வரன் உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

கோட்டீஸ்வரன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கோட்டீஸ்வரனின் நெருங்கிய கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. அவர்களுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. எனவே அவர்களை பிடித்தால் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டீஸ்வரனின் நண்பர்கள் மற்றும் அவருக்கு கடைசியாக போன் செய்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூரில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 11–ந் தேதி சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் பிரபாகரன் என்பவர் தலையில் கல்லைபோட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோட்டீஸ்வரன் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்