பாசிமுத்தான் ஓடை தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

புவனகிரி அருகே பாசிமுத்தான் ஓடை தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-14 21:45 GMT

பரங்கிப்பேட்டை,

கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. அதுபோல் சிதம்பரம் பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடை மற்றும் கான்சாகிப் வாய்க்கால் ஆகியவற்றையும் தூர்வார தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான டெண்டர் விடப்பட்டது.

இதை தொடர்ந்து பாசிமுத்தான் ஓடை மற்றும் கான்சாகிப் வாய்க்கால் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை புவனகிரி தாலுகா வால்காரமேடு பொன்னேரி பகுதியில் இருந்து சி.முட்லூர் வரையுள்ள பாசிமுத்தான் ஓடையில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்கனவே ஓடை இருந்த அகலம் மற்றும் ஆழத்திற்கு தூர்வாரி ஆழப்படுத்தாமல் குறுகிய அளவில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இது பற்றி அறிந்த புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த லால்புரம் மற்றும் மணலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜாகீர்உசேன் ஆகியோர் தலைமையில் பாசிமுத்தான் ஓடை தூர்வாரும் பணியை தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பாசிமுத்தான் ஓடையில் குறுகிய அகலத்திற்கு தூர்வாரி ஆழப்படுத்தினால் மழைக்காலங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். மேலும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெருத்த சேதத்தை உண்டாக்கும் நிலை ஏற்படும். அதனால் பாசிமுத்தான் ஓடையை ஏற்கனவே இருந்த அகலம் மற்றும் ஆழத்திற்கு தூர்வார வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள், இந்த ஓடையை பழைய அளவுக்கே தூர்வாரி ஆழப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் பாசிமுத்தான் ஓடையை பழைய அளவிற்கே அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்