ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் கலெக்டரிடம் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை
ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி
ஆண்டிப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 1–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக விசைத்தறி தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் கலெக்டர் வெங்கடாசலத்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
கடந்த 30–ந்தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரியின் மூலம் அனைத்து விதமான தொழில்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஜவுளித் தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதால் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள சிறுவிசைத்தறி உரிமையாளர்களும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் கடந்த 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.யை கைவிடக்கோரி சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் ஆகிய ஊர்களில் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகிறோர்கள். உற்பத்தி இழப்பும், வேலை இழப்பும் ஏற்பட்டு உளளது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஜவுளித்தொழிலை காப்பாற்றவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நாட்டு நலன் கருதி ஜி.எஸ்.டி.யை ரத்து வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.