தமிழ்நாட்டில் பிரகடனப்படுத்தப்படாத குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெறுகிறது தா.பாண்டியன் பேட்டி

கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வளர்ச்சி நிதியளிப்பு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

Update: 2017-07-14 22:30 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வளர்ச்சி நிதியளிப்பு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வந்தார். முன்னதாக அவர் பயணியர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வருவதாக கூறிய போது, அப்போது குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திரமோடி இது ஏற்கத்தக்கது அல்ல. இது மாநில உரிமையை பறிக்கிறது என கூறி ஜி.எஸ்.டி.யை எதிர்த்தார். ஆனால் தற்போது நரேந்திரமோடி பிரதமராக ஆனதும் அதே ஜி.எஸ்.டி.வரியை கொண்டு வந்துள்ளார். மது மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 15 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என எதிர்க்கட்சிகள் கூறியது. முக்கியமாக மக்கள் வாங்கி சாப்பிடும் உணவு பொருட்கள் மீது வரி போடக்கூடாது என கூறியது. ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இந்த ஜி.எஸ்.டி.வரியால் ஓட்டல்களில் இட்லி, தோசை, காபி போன்றவற்றிற்கு வரியை உயர்த்தி உள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை கவர்னராக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கிறார்கள் என்றால், அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எனவே அந்த கவர்னர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிரகடனப்படுத்தப்படாத குடியரசு தலைவர் ஆட்சிதான் நடக்கிறது. தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், இழந்து வரும் உரிமைகளை தடுத்து நிறுத்தவும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்