ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடிஅமாவாசை திருவிழா கொடியேற்றம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23–ந் தேதி கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.
கொடியேற்றம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சுவாமி கேடய சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆடி அமாவாசை திருவிழாவிழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் இரவில் பக்தி சொற்பொழிவு, வில்லிசை, பொம்மலாட்டம், பரதநாட்டியம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
10–ம் திருநாளான 23–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.
பச்சை சாத்தி...11–ம் திருநாளான 24–ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 25–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி, தாமிரபரணியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மதியம் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.