கோர்ட்டில் கொலை வழக்கில் சாட்சி சொன்னபோது தானாக சிக்கிய போலி டாக்டர்

திருவண்ணாமலை கோர்ட்டில் கொலை வழக்கில் சாட்சி சொன்னபோது தானாக சிக்கிய போலி டாக்டர், நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-14 00:09 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் கடந்த 2009–ம் ஆண்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து, வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, போலீசாரின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றிருந்த சாட்சிகளில் ஒருவரான டி.வாளவெட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் அறிவானந்தம் (33) என்பவர் சாட்சி அளித்தார். போலீசார் அளித்திருந்த சாட்சிகள் ஆவணத்தில், அறிவானந்தம் ஒமியோபதி டாக்டராக பணிபுரிகிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதி, சாட்சி சொன்ன அறிவானந்தத்திடம் சாட்சி ஆவணத்தில் ஒமியோபதி டாக்டர் என உங்களை குறிப்பிட்டுள்ளது சரியா? என்றார். அதற்கு ஆமாம் என அறிவானந்தம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஒமியோபதி மருத்துவம் படித்திருக்கிறாயா? என நீதிபதி கேட்டார். அதற்கு மருத்துவம் படிக்கவில்லை என அறிவானந்தம் தெரிவித்தார். போலீசார் அளித்துள்ள ஆவணத்தில் ஒமியோபதி டாக்டர் என எழுதியுள்ள படிவத்தில் இருப்பது உன்னுடைய கையெழுத்துதானா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு என்னுடைய கையெழுத்துதான் என அறிவானந்தம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முறையாக மருத்துவம் படிக்காமல், ஒமியோபதி டாக்டர் என தன்னை குறிப்பிட்டு கோர்ட்டில் சாட்சி சொன்ன அறிவானந்தத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

அதன்படி, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அறிவானந்தத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்