புதுச்சேரி–ஐதராபாத் இடையே விமான சேவை ஆகஸ்டு 15–ந்தேதி தொடங்குகிறது

புதுச்சேரி–ஐதராபாத் இடையே வருகிற ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளது.

Update: 2017-07-13 23:43 GMT

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கு ஓடுதளத்தின் நீளம் குறைவாக இருந்ததால் முன்பு 18 இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. ஆனால் விமான நிறுவனங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

அதன்பின் விமான ஓடுதளம் நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 70 இருக்கைகள் வரை கொண்ட விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்கள் திருப்பதி, பெங்களூருக்கு இடையே தனியார் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டன. அதிலும் போதிய வருமானம் இல்லாததால் ஒரு சில வாரங்களே நடைபெற்ற விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் புதுவையில் கடந்த ஆண்டு பொறுப்பேற்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு மீண்டும் விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக பல்வேறு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டும் வகையில் இழப்பினை அரசு வழங்கவேண்டும் என்று விமான நிறுவனங்கள் வலியுறுத்தின. ஆனால் இதற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்கவில்லை.

தற்போது மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் 500 கி.மீ. தொலைவிலுள்ள நகரங்களுக்கு செல்ல விமான கட்டணமாக ரூ.2,500 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பெங்களூர், ஐதாராபாத், கோவை, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க உள்ளது. இந்த சேவை வருகிற ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான கட்டணம் ரூ.2,500 ஆகும்.

மேலும் செய்திகள்