மாட்டு இறைச்சி விவகாரத்தில் வந்துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது அல்ல இல.கணேசன் பேட்டி

மாட்டு இறைச்சி விவகாரத்தில் வந்துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது அல்ல என இல.கணேசன் எம்.பி. கூறினார்.

Update: 2017-07-13 23:00 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

ராஜாக்கமங்கலம் ஒன்றியம் தர்மபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட மணிக்கட்டிபொட்டல், பெருங்குளம், ராமபுரம், வெள்ளாவிளை போன்ற பகுதிகளில் பா.ஜனதா சார்பில் நேற்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அப்போது, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. வீடு- வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது மாட்டு இறைச்சி விவகாரத்தில் வந்துள்ள தீர்ப்பு மத்திய அரசிற்கு எதிரானது அல்ல. இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்த போவதில்லை. காவிரி பிரச்சினையில் நிரந்தரமான தீர்வை, காவிரி நடுவர் மன்றம் எடுக்கும் முன்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பின்னணி எதுவும் கிடையாது.

தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் உள்ளது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். அந்த தேச விரோத சக்திகளால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக நடத்தி வந்தார். அவருக்கு இணையான தலைவர் இல்லை. இது தொண்டர்களுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் கோஷ்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இதனை பேசி தீர்த்து 4-ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால் தி.மு.க. ஆட்சி வந்துவிடும். எனவே, அவர்கள் பிரச்சினைகளை மறந்து சுமூகமான தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது சந்தேகமே.

ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் ராம்நாத்கோவிந்திற்கு கிடைக்கும். அவர் வெற்றி பெறுவது உறுதி. மோடி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சிலர் எதிர்க்கிறார்கள், குறை கூறுகிறார்கள். பா.ஜனதா ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை வீடு- வீடாக சொல்வதற்காகதான் நான் இங்கு வந்துள்ளேன். தர்மபுரம் ஊராட்சியில் வீடு- வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணி நாளையும் (இன்று) தொடரும்.

பேட்டியின் போது கோட்ட இணை பொறுப்பாளர்கள் தர்மபுரம் கணேசன், வேல்பாண்டியன், மாவட்ட செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் தர்மலிங்க உடையார், ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் முத்து சரவணன், ஒன்றிய பொது செயலாளர் சிவகுமார், தர்மபுரம் ஊராட்சி பா.ஜனதா தலைவர் சுயம்பு, லதாகோபால், சுதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்