தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்

அனைவருக்கும் தடையின்றி பணி வழங்கக்கோரி தேசிய ஊரக வேலை திட்டப்பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-13 22:45 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஓபசமுத்திரம் கிராமம். இங்கு உள்ள 400 பெண்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இவர்கள் அனைவருக்கும் முழுமையாக 100 நாள் வேலை வழங்கப்படுவது இல்லை என்றும் வேலையை ஒதுக்கீடு செய்யும் ஊராட்சி செயலாளர், ஒரு பிரிவினருக்கு மட்டும் தொடர்ந்து வேலையை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் கூறப்படுகிறது. அப்படியே வேலை வழங்கப்பட்டாலும் அதற்கான பணத்தை கூட பயனாளிகளுக்கு முழுமையாக வழங்குவது இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

இதை கண்டிக்கும் வகையிலும், அனைவருக்கும் தேசிய ஊரக வேலை திட்டப்பணியை தடையின்றி வழங்கக்கோரி ஓபசமுத்திரத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலை திட்டப்பணியாளர்கள் 150 பேர் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவை அவர்கள் முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

இது குறித்து மேற்கண்ட ஊராட்சி செயலாளரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலை ஒதுக்கீடு செய்யும் போது பாகுபாடு இன்றி அனைவருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி ராஜேந்திரபாபு உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்