கோவில்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

கோவில்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-13 21:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி–கடலையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்


கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கலைஞர் நகரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீரின்றி வறண்டது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் பக்கத்து ஊரான காட்டுராமன்பட்டியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அங்கிருந்து லிங்கம்பட்டி கலைஞர் நகருக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படவில்லை.

எனவே கலைஞர் நகரில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, நேற்று காலையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் லிங்கம்பட்டி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி– கடலையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து யூனியன் ஆணையாளரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடம் கோவில்பட்டி–கடலையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்