குற்றாலம் அருகே தேர்வில் தோற்றதால் என்ஜினீயரிங் படித்த வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

குற்றாலம் அருகே என்ஜினீயரிங் படித்த வாலிபர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-07-13 21:00 GMT

தென்காசி,

குற்றாலம் அருகே என்ஜினீயரிங் படித்த வாலிபர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவத்தின் விவரம் வருமாறு:–

தேர்வில் தோல்வி

குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு ராயர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அழகையா. கடையத்தில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி கீழப்பாவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுடைய மகன் ஜோதி ராஜபிரபு (வயது 22). வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். ஆனால் சில பாடங்களில் தேர்வாகவில்லை. இதனால் படித்த படிப்புக்கான வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

தூக்கிட்டு தற்கொலை

ஜோதி ராஜபிரபு கடந்த சில நாட்களாக மிகுந்த வேதனையுடன் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. ஒரு அறையின் மேற்கூரையில் உள்ள ஒரு கொக்கியில் ஜோதி ராஜபிரபு சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் பிணமாக தொங்கிய ஜோதி ராஜபிரபுவை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

கடிதம்

இதுகுறித்து குற்றாலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனுஷ்கோடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன ஜோதி ராஜபிரபு கல்லூரி நோட்டு புத்தகத்தில் தான் தோல்வி அடைந்த பாடங்களை எழுதி ‘‘சாரி மம்மி, டாடி‘‘ என்று எழுதியுள்ளார். அவரது உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்