தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

கர்நாடகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி வாரிய தலைவர் கூறினார்.

Update: 2017-07-12 23:51 GMT

கோலார் தங்கவயல்

கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று கர்நாடக கன்னட வளர்ச்சி வாரிய தலைவர் சித்தராமையா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் திரிலோக் சந்திரா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி காவேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கன்னட வளர்ச்சி வாரிய தலைவர் சித்தராமையா பேசியதாவது:–

கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கோலார் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என கன்னட அமைப்பினர் மூலம் எனக்கு புகார் வந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதன்பிறகும், தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால், அந்த தொழிற்சாலைகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சென்று விவரங்களை சேகரித்து கன்னட வளர்ச்சி வாரியத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்