நடிகர் சுதீப் மீது மோசடி புகார்
தனது வீட்டில் படப்பிடிப்பு நடத்தியதற்கான வாடகை பாக்கியை தரவில்லை எனக்கூறி நடிகர் சுதீப் மீது விவசாயி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டிடம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
சிக்கமகளூரு,
தனது வீட்டில் படப்பிடிப்பு நடத்தியதற்கான வாடகை பாக்கியை தரவில்லை எனக்கூறி நடிகர் சுதீப் மீது விவசாயி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையிடம் மோசடி புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பிரபல கன்னட திரைப்பட நடிகர் சுதீப். இவர் நடிகர் விஜய் நடித்த ‘புலி’, நடிகை சமந்தா நடித்துள்ள ‘நான் ஈ’ போன்ற தமிழ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் இவர் சொந்தமாக சின்னத்திரை நாடகம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த நாடகத்தின் படப்பிடிப்பு சிக்கமகளூரு மாவட்டம் மல்லந்தூர் அருகே உள்ள பைகூர் கிராமத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக நாடகத்தின் இயக்குனரும், நடிகர் சுதீப்பும் பைகூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான தீபக் என்பவருக்கு சொந்தமான காபித் தோட்டத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டை படப்பிடிப்பிற்காக தேர்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தீபக்கிடமும் பேசினர்.
அப்போது இந்த வீட்டில் தங்கி நாடகத்திற்கான படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ஒவ்வொரு நாளைக்கும் ரூ.6 ஆயிரம் வாடகை கொடுப்பதாகவும் கூறினர். அதற்கு தீபக்கும் ஒப்புக் கொண்டார். அதையடுத்து அந்த வீட்டில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.பின்னர் அங்கு வந்த நடிகர் சுதீப், தீபக்கிடம் நாடக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்குவதற்கும், அலங்காரம் செய்வதற்கும் இந்த இடம் போதுமானதாக இல்லை. தினமும் இதற்காக சிக்கமகளூரு டவுனுக்கு சென்று வர வேண்டி உள்ளது. அதனால் நீங்கள் இங்கேயே எங்களுக்கு ஒரு கட்டிடம் கட்டித்தாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதை ஏற்றுக்கொண்ட தீபக், தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காபி, மிளகு செடிகளை அழித்துவிட்டு அங்கு சுமார் 50 பேர் தங்கும் அளவில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டித் தந்துள்ளார். அதையடுத்து தொடர்ந்து அங்கு படப்பிடித்து நடந்தது. மேலும் நடிகர் சுதீப், தீபக்கிற்கு சேர வேண்டிய வாடகை பணத்தையும் கொடுத்து வந்தார்.இந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து தீபக்கின் வீட்டில் இருந்து நாடகக்குழுவினர், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்–நடிகைகள் அனைவரும் சென்றுவிட்டனர். அவர்கள் யாரும் தீபக்கிற்கு சேர வேண்டிய வாடகை பாக்கியை தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தனக்கு சேர வேண்டிய வாடகை பாக்கி ரூ.1½ லட்சம் குறித்து, நாடக இயக்குனரிடம் கேட்டார். அப்போது அவர் இதுகுறித்து நீங்கள் நடிகர் சுதீப்பிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு தீபக் பல்வேறு முயற்சிக்குப்பின் நடிகர் சுதீப்பை தொடர்பு கொண்டு வாடகை பாக்கி குறித்து கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர் அதற்கு சரியாக பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த தீபக், இப்பிரச்சினை குறித்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலையிடம் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகர் சுதீப் மீது விவசாயி ஒருவர் பண மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.