பயங்கரவாதிகள் தாக்குதலை கண்டித்து பால்கரில் கடையடைப்பு

அமர்நாத் பக்தர்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலை கண்டித்து பால்கரில் கடையடைப்பு செய்யப்பட்டது.

Update: 2017-07-12 23:11 GMT

வசாய்,

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்த பக்தர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான 7 பேரில் பால்கர் மாவட்டம் தகானுவை சேர்ந்த பெண்கள் உஷா சோனார் மற்றும் நிர்மலா தாக்குர் ஆகியோரும் அடங்குவார்கள்.

அவர்களது உடல் ஹெலிகாப்டர் மூலம் தகானுவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதி சடங்கு நடந்த நேரத்தில், ஆவேசம் அடைந்து பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு உண்டானது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

இந்தநிலையில், அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேற்று பால்கரில் அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதை ஏற்று மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். மார்க்கெட்டுகளும் செயல்படாமல் மூடியிருந்தன. தனியார் அலுவலகங்களும் திறக்கப்படவில்லை. தகானுவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

அதே நேரத்தில் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

ஆட்டோ, டாக்சி, பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. முழு அடைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்