எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி தொடர் முழக்க போராட்டம்

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி தொடர் முழக்க போராட்டம் 12-வது நாளாக நேற்று நடந்தது.

Update: 2017-07-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தன்னார்வ மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் தஞ்சையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 12-வது நாளாக இந்த தொடர் முழக்க போராட்டம் நடை பெற்றது.

போராட்டத்துக்கு வர்த்தக தொழில் மைய தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய குழு, தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதன்படி செங்கிப்பட்டியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தான் தமிழகத்தின் மையப்பகுதியாகும். எனவே தமிழக அரசும் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

போராட்டத்தில் மக்கள் நல பேரவை தலைவர் தங்கராசு, வக்கீல் ஜீவக்குமார், ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் அன்பரசன், வணிகவரித்துறை ஆடிட்டர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், என்ஜினீயர் பாலசுந்தரம், கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜகோபால், மூத்த குடிமக்கள் பேரவை இணை செயலாளர் ராமதாஸ், அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சுகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்