கல்லூரி மாணவிகளை போராட தூண்டியதாக சேலத்தில் 2 பெண்கள் அதிரடி கைது

கல்லூரி மாணவிகளை போராட்டத்துக்கு தூண்டியதாக சேலத்தில் 2 பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-07-13 00:00 GMT
சேலம்,

சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று காலை இந்த கல்லூரி முன்பு நின்று கொண்டு 2 பெண்கள், கல்லூரிக்குள் செல்லும் மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டிருந்தனர். அந்த துண்டு பிரசுரங்களில் நெடுவாசல் கிராமத்தில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்ககூடாது என்றும், கதிராமங்கலத்தில் போராடிய கிராம மக்களை காவல்துறை கைது செய்ததை எதிர்த்தும் வருகிற 15-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்க உள்ள போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அதை எதிர்த்து மாணவிகள் போராட முன்வர வேண்டும் என்றும், போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தரவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

கல்லூரி செல்லும் மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை 2 பெண்களும் வினியோகம் செய்து, அவர்களை போராட தூண்டுவதாக சேலம் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக, அரசு கல்லூரி எல்லைக்குட்பட்ட கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகித்து கொண்டிருந்த 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றினர். கைதானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. வளர்மதி(வயது23). வீராணம் அருகே உள்ள பீமானூரை சேர்ந்த மாரியப்பன் மகள். இவர் வேளாண் துறையில் பட்டம் பெற்று, தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் மேற்படிப்பு படித்து வருகிறார். 2.ஜெயந்தி(39). சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகரை சேர்ந்தவர். இவர் வளர்மதி தோழியின் தாயார் ஆவார்.

கைதான வளர்மதி மீது அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக கரூர் மாவட்டம் குளித்தலை, கோவை, சிதம்பரம், சேலம் பள்ளப்பட்டி, சேலம் டவுன் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே மாவோயிஸ்டு தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் சேலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பழனிவேலு ஆதரவாளராக செயல்பட்டு வந்ததாகவும், மாவோயிஸ்டு பட்டியலில் வளர்மதி பெயரும் இடம் பெற்றுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், காவல்துறையினர் வளர்மதியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதே வேளையில் கைதான ஜெயந்தி மீதும் வழக்குகள் ஏதேனும் உள்ளனவா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் வளர்மதியுடன் சேர்ந்து துண்டு பிரசுரங்களை வழங்கியதால், ஜெயந்திக்கும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. கைதான இருவரும் சேலம் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. மாவோயிஸ்டு பட்டியலில் வளர்மதி பெயர் உள்ளதால் ‘கியூ‘ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர்.

கைதான வளர்மதி கூறுகையில், “இயற்கையை காப்பாற்றவும் அதை எதிர்த்து போராடவும் துண்டு பிரசுரம் வழங்கியது பெரிய குற்றமா?. என்னை எதற்காக கைது செய்தார்கள்?. ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்திட அடிப்படை உரிமை கூட கிடையாதா?. போலீசார் என்னை, நக்சல் இயக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு அவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? அதை காண்பிக்க முடியுமா?. காலை 8 மணிக்கே கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து தொந்தரவு செய்து வருகிறார்கள்“ என்று ஆவேசமாக தெரிவித்தார்.

கடந்த 4-ந் தேதி ஆந்திர மாநில போலீசார் ஈரோட்டில் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணை கைது செய்தனர். அப்போது, பத்மாவுக்கு ஆதரவாக வளர்மதி முகநூலில் குரல் எழுப்பி இருந்தார். “தோழர் பத்மாவை விடுதலை செய்திட குரல் எழுப்புவோம்‘ என பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “வளர்மதி மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருப்பதை அறிந்து அவரை கண்காணித்து வந்தோம். கல்லூரி மாணவிகளை திசைதிருப்பும் வகையிலும், போராட தூண்டும் வகையிலும் துண்டு பிரசுரங்களை வழங்கியதை கையும் களவுமாக பிடித்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. சேலம் மாவட்டத்தில் இதேபோன்று மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் மாணவ-மாணவிகளை ஒன்று திரட்டி போராட்டத்திற்கு தயார்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து சேலம் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வளர்மதி, சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாரால் கைது செய்து வைத்திருப்பதை அறிந்து, அவரை பார்க்க பல்வேறு அமைப்பினர் வந்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், தமிழக அரசின் நடவடிக்கை மக்களுக்கு எதிரானது என்றும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வழங்கியதை மாவோயிஸ்ட் என்றுக்கூறி கைது செய்ததை கண்டிக்கிறோம் என்றும் குரல் எழுப்பினார்கள். அத்துடன் வளர்மதி மற்றும் ஜெயந்தியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் வளர்மதியை சந்திக்க வக்கீல்கள் சிலர் வந்தனர். அவர்களை பார்த்ததும் போலீஸ் நிலையத்தில் இருந்து எழுந்து வந்த வளர்மதி, “மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியதற்காக தன்னை அடித்து இழுத்து வந்தனர். தன்னை நக்சல் என்று கூறுவதை உடனடியாக போலீசார் நிறுத்திக்கொள்ள வேண்டும்“ என்றும் தெரிவித்தார்.

சேலம் பெண் மாவோயிஸ்ட் உள்பட 2 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வளர்மதி உள்பட 2 பேர் மாவோயிஸ்ட் எனக்கூறி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பல கருத்துகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்