கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 38). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று எளாவூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி ஷேர் ஆட்டோ ஓட்டி சென்றார்.

Update: 2017-07-12 22:30 GMT

கும்மிடிப்பூண்டி,

 ஆட்டோவில் 10 பயணிகள் இருந்தனர். சின்னஓபுளாபுரம் மேம்பாலத்தையொட்டி சாலையோரம் பயணிகளை இறக்குவதற்காக முருகன் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது ஆட்டோவை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஆட்டோவிற்கு முன்னால் வந்து வழிமறித்து நின்றது. அதில் 2 பேர் அமர்ந்து இருந்தனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த மர்ம நபர், திடீரென அரிவாளால் ஆட்டோ டிரைவர் முருகனின் கழுத்தை நோக்கி வெட்டினான். அப்போது தனது கைகளை கொண்டு தடுத்ததால் முருகனின் இரண்டு கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து முருகன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண்கள் உள்பட அனைவரும் மேற்கண்ட சம்பவத்தை கண்டு அலறி அடித்துக்கொண்டு ஆட்டோவை விட்டு கீழே இறங்கி ஓடினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்படவே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பட்டப்பகலில் முருகனை அரிவாளால் வெட்ட வந்தவர்கள் கூலிப்படையினர் என்பதும், அவர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் வந்து இருந்ததும் தெரியவந்துள்ளது.

முருகனை கூலிப்படையினர் ஏன் கொலை செய்ய முயற்சித்தனர்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்