பவானி ஜமுக்காளத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

பவானி ஜமுக்காளத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சங்கத்தினர் கலால்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2017-07-12 22:45 GMT

பவானி,

மத்திய அரசு கடந்த 1–ந் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதில் ஜமுக்காள விற்பனைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பவானியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், தனியார் ஜமுக்காள வியாபாரிகள் கடந்த 11 நாட்களாக ஜமுக்காள விற்பனையை நிறுத்தியுள்ளார்கள். இதனால் சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான ஜமுக்காளங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ளது.

எனவே ஜமுக்காளத்துக்கு வரிவிதிப்பில் விலக்கு அளிக்கக்கோரி அச்சங்க உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மத்திய கலால் துறைக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய கலால் துறை உதவி ஆணையாளர் பூபால், ஆய்வாளர் காயத்ரி, கண்காணிப்பாளர் முத்துவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட குழுவினர் பவானி கைத்தறி ஜமுக்காள நெசவுக்கூடங்களுக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ஜமுக்காள நெசவு கூடங்கள், பயன்படுத்தப்படும் நூல்கள், பாரம்பரியம், நெசவு முறை குறித்து விசாரித்தார்கள். மேலும் கைத்தறி தொழில் நசிந்து வரும் நிலையில் ஜமுக்காளத்துக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்ததால் இத்தொழில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்கம், பவானி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் கூட்டமைப்பு, பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கத்தினர் கலால்துறை அதிகாரிகளிடம் கூறும்போது, ‘கடந்த 1954–ம் ஆண்டு முதல் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜமுக்காளத்துக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை. தமிழக அரசு இத்தொழிலை பாதுகாக்கும் வகையில் விற்பனை மானியம் அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. எனவே கைத்தறியில் நெய்யப்படும் பவானி ஜமுக்காளத்துக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘உங்கள் கோரிக்கை பரிசீலித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

மேலும் செய்திகள்