ரூ.20 லட்சம் விற்பனை மதிப்புள்ள நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு பெற விண்ணப்பிக்கலாம்
ரூ.20 லட்சம் விற்பனை மதிப்புள்ள நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு பெற விண்ணப்பிக்கலாம் மண்டல கண்காணிப்பு அலுவலர் தகவல்
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வணிகவரித் துறையின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லி நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணைச் செயலாளரும், சரக்கு மற்றும் சேவை வரி கண்காணிப்பு மற்றும் செயல்படுத்தும் அலுவலர் ஆனந்த் தலைமையில், கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மண்டல ஜி.எஸ்.டி. கண்காணிப்பு மற்றும் செயல்படுத்தும் அலுவலர் ஆனந்த் கூறியதாவது:–
மத்திய அரசின் மூலம் பொருளாதார திருப்புமுனையாக ஒரு பொருளுக்கு ஒரு வரி எனும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியுள்ளது. 1991–ம் ஆண்டு முதல் பொருளாதாரம் ஏற்பட்டதை நாம் கண் கூடாக பார்த்தோம். அதைபோல இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரே நாடு, ஒரே வரி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டதன் மூலம் பொருளாதாரம் விரைந்து முன்னேறும். உலகில், 164 நாடுகளில் இதுபோன்ற வரி முறைகள் அமலில் உள்ளன. நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஜி.எஸ்.டி. வரி முறை குறித்த குறைகளை கேட்டறிந்து அறிக்கை அனுப்ப நாடு முழுவதும் உள்ள 631 மாவட்டங்களை 166 மண்டலங்களாக பிரித்து, 4 மாவட்டங்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் இணைச் செயலாளர்கள் நிலையிலான அலுவலர்களை நியமித்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ள சந்தேகங்களை, குறைகளை கேட்டறிந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளது.
பழைய வரி விகிதங்களில் காலாண்டு ஒரு முறை வரி கட்டுவதும், அரையாண்டு ஒரு முறை ரிட்டன்ஸ் தாக்கல் செய்யும் முறை மாற்றப்பட்டு, தற்போது மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விற்பனை மதிப்புள்ள நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு செய்திட விண்ணப்பிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி அதிகரிக்கக் கூடாது. இதை கலெக்டர்கள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மத்திய–மாநில அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் அதிகமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திடும் வாய்ப்பு ஏற்படும். இங்கு தனியார் நிறுவன பிரதிநிதிகளின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண உங்களின் கருத்துக்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.