டெங்கு, ஜிகா வைரஸ் போல் தமிழகத்தில் பயங்கரவாதம் பரவி வருகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

டெங்கு, ஜிகா வைரஸ் போல் தமிழகத்தில் பயங்கரவாதம் பரவி வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-07-12 22:45 GMT

நாகர்கோவில்,

அமர்நாத் யாத்திரையின்போது கொடூர தாக்குதல் நடந்துள்ளது. அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற தாக்குதல்கள் இனி நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

நாட்டில் மத்திய மற்றும் மாநில அளவிலான 17 வரிகளை மாற்றிவிட்டு ஒரே நாடு, ஒரே வரி என்ற முறை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றிய குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாக விளக்க கூட்டம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. அதில் 1½ லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 70 சதவீத விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன. விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு, ஜிகா வைரஸ் போல் தமிழகத்தில் பயங்கரவாதம் பரவி வருகிறது. அதை தடுக்க வேண்டும். அதை தடுக்காமல் இருந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறிவிடும் என்று அரசுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால் நான் கூறியதை வைத்து சிலர் புகார் தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் வழக்கு தொடர்ந்தால் பார்த்துக்கொள்ளலாம்.

கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் பாலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக பா.ஜனதா அமையும். அதனால் தான் பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கபூர்வமான பணியாக செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்