முறையாக பணி வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

முறையாக பணி வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2017-07-11 23:09 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது நொச்சிக்குப்பம் மற்றும் பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்கள். மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பணியானது முன்பு வழங்கப்பட்டது போல் தற்போது முறையாக வழங்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.

மேலும் அவ்வாறு ஒரு சில பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டாலும் கூட அனைத்து நாட்களிலும் மேற்கண்ட வேலை வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தேசிய ஊரக வேலை திட்ட பணியை அனைவருக்கும் முறையாக அனைத்து நாட்களிலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நொச்சிக்குப்பம் மற்றும் பாட்டைகுப்பம் கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவிடன் வழங்கி விட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்