மந்திரிகள் ரமாநாத்ராய், யு.டி.காதரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் பா.ஜனதா

மங்களூருவில் மதக்கலவரத்திற்கு காரணமான மந்திரிகள் ரமாநாத்ராய், யு.டி.காதர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-07-11 23:15 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

144 தடை உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த 46 நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விழாவோ, கூட்டமோ நடத்த அனுமதி வழங்கவில்லை. மக்கள் சுதந்திரமாக நடமாடவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் 2 கொலைகள் நடந்துள்ளன. 4, 5 பேர் மீது கொலைவெறி தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

பவன் என்பவர் மீது கடந்த ஜூன் மாதம் 13–ந் தேதி பயங்கரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னை தாக்கியவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் கூறியுள்ளார். ஆனால் இதுவரை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரத் மடிவாளாவின் இறுதி ஊர்வலம் மங்களூருவில் நடைபெற்றது. அப்போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகள் வீடியோ மூலம் பதிவாகியுள்ளது.

யாரையும் கைது செய்யவில்லை

ஆயினும் கல்வீசியவர்களை கைது செய்யாமல், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். மிரட்டுகிறார்கள். சரத் மடிவாளா கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. இந்த சம்பவத்தை மூடிமறைக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது.

தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி ரமாநாத்ராய், தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறுங்கள் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. தேர்தல் வரும்போது அவரை எதிர்த்து யார் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் கட்சி முடிவு செய்யும். இந்த சம்பவத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே மந்திரி ரமாநாத்ராய் இவ்வாறு மாற்றி பேசுகிறார்.

மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில்...

முதல்–மந்திரி சித்தராமையா மங்களூரு வந்தபோது, அதற்கு வசதியாக தடை ஆணையை விலக்கி கொண்டனர். காங்கிரஸ் கூட்டத்தையும் நடத்தினர். அவர் அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரத் மடிவாளாவை சந்தித்து பேசுவார் என்று நாங்கள் கருதினோம். ஆனால் சந்திக்கவில்லை. மங்களூருவில் சித்தராமையா, மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசினார். அவர் மங்களூரு வந்த நாளில் கலவரம் ஏற்பட்டது.

முஸ்லிம் என்று பெயர் சொல்லவே சித்தராமையா பயப்படுகிறார். அவர் வாக்கு வங்கி அரசியலை செய்கிறார். இதனால் தவறு செய்தாலும் முஸ்லிம்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்துக்களை, இந்துமத அமைப்புகளின் நிர்வாகிகளை குறியாக வைத்து, இந்த அரசு செயல்படுகிறது. இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் குரல் கொடுப்போம். எங்களை யாரும் தடுக்க முடியாது.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்

சித்தராமையா உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை பெங்களூருவில் நேற்று முன்தினம் கூட்டினார். இதில் கெம்பையாவை தனது அருகில் உட்கார வைத்து இருந்ததின் மூலம், சித்தராமையா போலீஸ் அதிகாரிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. அங்கு மதக்கலவரத்திற்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த மந்திரிகள் ரமாநாத்ராய், யு.டி.காதர் ஆகியோர் தான் காரணம். அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மங்களூருவில் தேசிய விசாரணை முகமை(என்.ஐ.ஏ.) அலுவலகம் தொடங்குமாறு கோரி உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். கர்நாடக அரசும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்