ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி 6 நாட்கள் நடந்த ஜவுளி வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது
ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி 6 நாட்களாக நடந்த ஜவுளி வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஈரோடு,
சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜி.எஸ்.டி.யை கடந்த 1–ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி ஜவுளிக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜி.எஸ்.டி.யில் இருந்து ஜவுளிக்கு விலக்கு அளிக்கக்கோரியும் ஈரோட்டில் வியாபாரிகள் ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கு முன்பு கடந்த மாதத்தில் இருந்தே போராட்டத்தில் இறங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து கடந்த 6–ந் தேதி முதல் 6 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 6–ந் தேதியில் இருந்து ஜவுளி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விசைத்தறி உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தினார்கள். இதனால் விசைத்தறிக்கூடங்கள் செயல்படவில்லை. இதேபோல் சாய, சலவை பட்டறை உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், சாய, சலவை பட்டறை உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் என ஜவுளி தொழில் சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் கடைசி நாளான நேற்றும் அவர்கள் மனித சங்கிலி நடத்தினர். ஈஸ்வரன்கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி ஆகிய இடங்களில் வியாபாரிகள் மனித சங்கிலியில் ஈடுபட்டு ஜவுளிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். முன்னதாக ஈஸ்வரன்கோவில் அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடையடைப்பு போராட்டம் நடந்ததால் ஈரோட்டில் உள்ள ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை கனிமார்க்கெட் ஜவுளி வாரச்சந்தை நடக்கும். ஆனால் போராட்டம் காரணமாக நேற்று மார்க்கெட் செயல்படவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, ஈஸ்வரன்கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:–
ஜவுளிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6 நாட்களாக போராட்டம் நடத்தினோம். இந்த வரி விதிப்பால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று (நேற்று முன்தினம்) சென்னையில் சந்தித்து பேசினோம். அப்போது, ஜி.எஸ்.டி.யில் இருந்து ஜவுளிக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் எங்களிடம், ‘‘ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வர மத்திய, மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. டெல்லியில் உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் நேரடியாக சென்று உங்களது கோரிக்கையை தெரிவியுங்கள். மாநில அரசு தரப்பில் நாங்களும் அழுத்தம் கொடுக்கிறோம்’’, என்றார். நாங்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. அதில் ஜவுளி வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தம் செய்ய ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
6 நாட்கள் போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததால் இன்று (புதன்கிழமை) முதல் ஜவுளிக்கடைகள் திறக்கப்பட உள்ளன.