நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆவணங்களை திருத்த முயற்சி கவர்னர் மீது, காங்கிரஸ் குற்றச்சாட்டு

நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆவணங்களில் திருத்தம் செய்ய கவர்னர் கிரண்பெடி முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Update: 2017-07-11 22:45 GMT

புதுச்சேரி,

முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநில கவர்னராக உள்ள கிரண்பெடியின் நடவடிக்கை தேசம் முழுவதற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை களங்கப்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதாவின் உத்தரவை செயல்படுத்தும் முதல் வேலையாளாக அவர் செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கவில்லை என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சமூக வலைத்தளத்திலும் இதே கருத்தை பதிவிட்டுள்ளார். நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் கவர்னரின் செயல்பாடு தொடர்பாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. நியமன எம்.எல்.ஏ. தொடர்பான வழக்கில் டெல்லியில் வைத்து ஆவணங்களை திருத்தம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது உள்துறை அமைச்சகத்தில் அவர் தான் நியமன எம்.எல்.ஏ.க்களை பரிந்துரை செய்தது போன்ற ஒரு கடிதத்தை தயார் செய்வதாக அறிகிறோம்.

நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க பரிந்துரைக்கவில்லை என்று கவர்னர் கூறியதை நாங்கள் ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம். இதனால் மாநில அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிடும் என்பதால் உள்துறை அமைச்சகமும், கவர்னரும் சேர்ந்து சில ஆவணங்களை தயார் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

அப்படி ஏதேனும் தவறான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு வந்தாலோ, ஆவணங்களை திருத்தம் செய்து அனுப்பினாலோ அதற்கு தகுந்த தண்டனை பெற்றுத்தருவோம். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வோம்.

சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் எத்தனையோ சட்டங்களையும், நியமனங்களையும் ரத்து செய்துள்ளன. அதேபோல் தற்போது விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டுள்ள நியமன எம்.எல்.ஏ.க்களையும் ரத்து செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கவர்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் அனுமதிக்காத பட்சத்தில் அவர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே நுழைய முடியாது. ரகசிய பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர் மாளிகையை சுற்றி சுற்றித்தான் அவர்கள் வரமுடியும்.

இவ்வாறு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறினார்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து காரைக்காலில் நேற்று தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக காரைக்காலில் உள்ள முக்கிய கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சினிமா தியேட்டரில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன.

தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார், வேன், லாரிகள், சரக்கு வாகனங்கள் ஓடவில்லை. பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின.

மேலும் செய்திகள்