விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பேரையூரில் அதிகாரிகள் வராததால் வெளிநடப்பு
உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், பேரையூர் தாலுகாக்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பேரையூரில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
பேரையூர்
மாவட்டத்திலுள்ள தாலுகாக்களில் ஒவ்வொரு மாதமும் 2–வது செவ்வாய்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. அதன்படி பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் பேரையூர், எழுமலை, அத்திபட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, ஆகிய உள்வட்டப் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விவசாய சம்பந்தப்பட்ட குறைகளை அரசின் பல்வேறு துறைகளைச்சேர்ந்த அலுவலர்களிடம் கூறுவதற்காக காலை 10.30 மணிக்கு வந்தனர்.
ஆனால் 11.30 மணி வரை எந்த துறையை சேர்ந்த அதிகாரிகளும் வரவில்லை. கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் தாசில்தார் உதயசங்கரும் வரவில்லை. இதனால் விவசாயிகள் அனைவரும் பரபரப்புடன் காணப்பட்டு வந்தனர். சிறிது நேரத்தில் வேளாண்மை, வனத்துறை அலுவலர்கள் மட்டும் வந்திருந்தனர். பிறதுறையினர் வராத காரணத்தினால், பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள் அனைவரும் ஆத்திரமடைந்து தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி, வெளியேறி சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க சேடபட்டி ஒன்றிய நிர்வாகி காசிமாயன் கூறியதாவது:– எங்கள் குறைகளை சென்ற மாதம் அதிகாரிகளிடம் கூறினோம். இந்த கூட்டத்தில் அவர்கள் பதில் அளிப்பதாக கூறினர். ஆனால் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகளைச்சேர்ந்த அதிகாரிகள் பலரும் வரவில்லை. அதில் முக்கியமாக தலைமை வகித்து கூட்டத்தை ஒருங்கிணைக்கும் தாசில்தாரும் வரவில்லை.
இதனால் எங்களுக்கு வழங்கவேண்டிய வறட்சி நிவாரணத்தொகை முழுமையாக கிடைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதாக கூறினார்கள், அதுவும் வழங்கவில்லை. நூறு நாள் வேலையில், வாரத்திற்கு 6 நாட்கள் பணி வழங்க வேண்டும், எனக்கோரிக்கை சென்றமாதமே வைத்தோம். அதுவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகளை மதித்து அவர்களின் குறைகளை கேட்க அரசுத்துறையினர் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாச்சியர் சுகன்யா தலைமை தாங்கினார். தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் தற்பொழுது அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியினால் உற்பத்தியாளர்களோ, விற்பானையார்களோ பாதிக்கப்படுவதில்லை. நுகர்வோர்கள் தான் இந்த வரியின் மூலம் பாதிக்கப்படுகிறார்கள். இதில் விவசாயத்திற்குகாக பயன்படுத்தப்படும் உரமும் அடங்குகிறது. எனவே உரங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளித்து விவசாயிகளை இந்த வரிச்சுமையிலிருந்து பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளான கண்மாய் மற்றும் ஊருணிகளை து£ர்வாருவதுடன் வரத்துக்கால்வாய்களையும் து£ர்வரா வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதில் கோட்டாச்சியர் சுகன்யா பேசுகையில் உசிலம்பட்டி நகராட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வர நகர் எல்லைக்குள் வெடி வெடிப்பதை நிறுத்த வேண்டும், சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடை அகற்ற பொதுமக்கள், விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெருமாள், துணைச் செயலாளர் சிவப்பிரகாசம், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், ஓய்வு பெற்ற கல்லு£ரி முதல்வர் சின்னன், முன்னாள் மேக்கிழார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் மாணிக்கம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் சரவணபெருமாள் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்பு பிரிவு தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் தனசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறிய விவரம் வருமாறு:– தாலுகா அலுவலகத்தில் மாதம் தோறும் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டம் குறித்து விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால், அவர்கள் குறைவான எண்ணிக்கையில் வருகின்றனர். எனவே இந்த குறை தவிர்க்க வேண்டும் என்று தென்பழஞ்சியை சேர்ந்த பாண்டி கூறினார்.
தனக்கன்குளம் பெரியகண்மாயில் தண்ணீரில் மூழ்கி பலர் இறந்துள்ளனர். எனவே இங்கு எச்சரிக்கை தகவல் பலகை வைக்க வேண்டும். மேலும் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் அருகே உள்ள நான்கு வழிச்சாலை பகுதியில் தொடர் விபத்துகளால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுவதை தடுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனக்கன்குளம் மணிக்காளை பேசினார். தென்பழஞ்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதி முற்றிலும் இல்லாததால், மாணவ, மாணவிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது இதுதொடர்பாக ஆணையாளர்களிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லாதால் பொதுமக்கள் மறியல் செய்யும் நிலை உள்ளது. அதை தவிர்க்கவேண்டும் என்று கூறப்பட்டது.
விவசாயிகளுக்கு பயிர் காப்பு இழப்பீடு இன்னும் வரவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டபோதும் வரும் என்றீர்கள். எப்போது வரும் என்று செந்தில் என்பவர் கேட்டார். குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் முதுகெலும்பாகவும் விளங்க கூடிய திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கும் போது ஆழம் தெரியாமால் கண்மாயில் இறங்குபவர்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிலை உள்ளது. எனவே சீராக மண் அள்ள நடவடிக்கை எடுக்க நடவடிக்கை வேண்டும் என்று சுப்பிரமணி பேசினார்.
வேடர்புளியங்குளத்தில் நிலத்தடிநீர் அதிகமாக உள்ளது. அதை பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வருவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. குறிப்பாக மோட்டார் இருந்தால், அதை இயக்க வைக்கும் கருவி இல்லை, அனைத்தும் இருந்தாலும், ஆப்பரேட்டர் இல்லை என்கிறார்கள். அது இருந்தால், இது இல்லை என்ற நிலை உள்ளதாக ஜெயக்குமார் கூறினார். இதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வேளாண்மை அலுவலர் அகிலா, உதவி அலுவலர் அழகேசன், விற்பனை துறை அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.