கவர்னர் ஆய்வு செய்த இடங்களில் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி

கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்த இடங்களில் எல்லாம் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதா? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

Update: 2017-07-10 22:37 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

சிறப்பு சட்டமன்றம்

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்த வி‌ஷயத்தில், தான் யாரையும் நியமிக்க பரிந்துரை செய்யவில்லை என்று கவர்னர் கூறுகிறார். அதேநேரத்தில் மத்திய மந்திரி வெங்கையாநாயுடுவும், மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார். அப்படி என்றால் நியமன எம்.எல்.ஏ.க்களை யார்தான் நியமித்தது?

அவர்களை பரிந்துரை செய்யவில்லை என்று கூறிய கவர்னர் கிரண்பெடி விதிமுறைகளை மீறி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். எனவே இதுகுறித்து உரிய முடிவெடுக்க புதுவை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். அதில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்.

டெல்லிக்கு அழைத்துச்சென்று...

பின்னர் அதை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரிக்கு அனுப்பவேண்டும். அதேபோல் எம்.எல்.ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று நேரடியாக வலியுறுத்த வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி எதிர்க்கிறார். ஆனால் முதல்–அமைச்சர் நாராயணசாமி அதை வரவேற்று புதுவை மாநிலத்தின் வரி வருவாய் பெருகும் என்கிறார். மக்கள் மீதான வரித்திணிப்பைப்பற்றி கவலைப்படாமல் தவறான கருத்துகளை வரவேற்கிறார்.

புதுவையில் விரைவில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற வேண்டும். சுயநிதி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஒரேமாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். அரசு இடஒதுக்கீட்டில் இடம்பெறும் மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றுவதை சட்டமாக்கிட வேண்டும்.

நாவடக்கம் தேவை

மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் அதற்கு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும்தான் பொறுப்பு என்று மக்களுக்கும், எங்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த கவர்னர் திட்டமிட்டு பேசுகிறார். அவர் இதுவரை எத்தனை இடங்களில் ஆய்வு செய்துள்ளார். அங்கிருந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிட்டாரா?

இதுவரை அவர் எங்கெங்கு ஆய்வு செய்துள்ளார்? அங்கு அவர் செய்ய தவறியது என்ன? என்பது குறித்து அ.தி.மு.க. சார்பில் அவருக்கு வாரந்தோறும் கடிதம் எழுத உள்ளோம். கவர்னருக்கு நாவடக்கம் தேவை. பதவிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவரது செயல்பாடு உள்ளது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்