சிவமொக்காவில் எடியூரப்பா வீடு முற்றுகை

சிவமொக்காவில் உள்ள எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசாரும், விவசாய பிரிவினரும் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-10 21:39 GMT

சிவமொக்கா,

தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தக்கோரி, சிவமொக்காவில் உள்ள எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசாரும், விவசாய பிரிவினரும் போராட்டம் நடத்தினர்.

மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் 160–க்கும் மேற்பட்ட தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில் விவசாயிகள் தேசிய, கூட்டுறவு வங்கிகளில் தாங்கள் வாங்கிய கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. மாநில அரசின் இந்த முடிவை விவசாயிகள் வரவேற்றனர். மேலும் விவசாயிகள் கடனை ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, மாநில அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால், தேசிய வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யும் என்று கூறி வந்தார். மேலும் மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால், பா.ஜனதா சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தொடர்ந்து கூறி வந்தார்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. இந்த நிலையில் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும் என்று சிவமொக்கா டவுன் வினோபா நகரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு சிவமொக்கா மாவட்ட இளைஞர் காங்கிரசாரும், விவசாய பிரிவினரும் திடீரென போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் கூறினர். ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிவமொக்கா டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்