குவெம்பு திறந்தவெளி கலையரங்கம் பராமரிக்கப்படுமா?

பத்ராவதி அருகே பயனற்று கிடக்கும் குவெம்பு திறந்தவெளி கலையரங்கம் பராமரிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2017-07-10 21:29 GMT

பத்ராவதி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி அருகே உள்ள பாரந்தூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் ஒரு நூலகமும், தேசிய கவிஞர் குவெம்பு பெயரில் திறந்தவெளி கலையரங்கமும், நாடக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடக மேடையில் 6 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடக கலைஞர்கள் உடை மாற்றிக் கொள்ளவும், ஓய்வு எடுக்கவும், அலங்காரம் செய்து கொள்ளவும் என தனித்தனியாக அதிநவீன வசதிகளுடன் இந்த அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திறந்தவெளி கலையரங்கில் ஒவ்வொரு ஆண்டும் கிராமிய நடனம், கலைகள், தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் நடத்தப்பட்டு வந்தன. இங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கலைஞர்கள் பத்ராவதிக்கு வருகை புரிவார்கள்.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க இந்த திறந்தவெளி கலையரங்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இதனால் அந்த இடமே பயனற்று கிடக்கிறது. அங்கு குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நாடகமேடையும் பயனற்று கிடக்கிறது. ஆங்காங்கே விரிசல்கள் காணப்படுகின்றன.

பல லட்ச ரூபாய் செலவில் மக்களுக்காக அரசால் அமைக்கப்பட்ட இந்த திறந்தவெளி கலையரங்கமும், நாடக மேடையும் பராமரிப்பு இன்றி பயனற்று கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகிறார்கள். இந்த கலையரங்கம் பராமரிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவி குமாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

பத்ராவதி அருகே பாரந்தூர் கிராமத்தில் உள்ள குவெம்பு திறந்தவெளி கலையரங்கம் பயனற்று கிடப்பது குறித்து எனது கவனத்திற்கு ஏற்கனவே தகவல் வந்தது. அது பராமரிக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகள், மக்கள் நல பிரதிநிதிகள், சமூக நல சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்