சாம்பவி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி
முல்கி பகுதியில் ஓடும் சாம்பவி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியானார்கள்.
மங்களூரு,
முல்கி பகுதியில் ஓடும் சாம்பவி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியானார்கள்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குத்தாரு பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ்(வயது 23), அக்ஷித்(22), கிஷோர்(21). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மகேஷ், அக்ஷித், கிஷோர் ஆகியோர் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஓடும் சாம்பவி ஆற்றுக்கு குளிக்க சென்று இருந்தனர்.அங்கு சென்றதும் மகேஷ், அக்ஷித், கிஷோர் ஆகியோர் மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அக்ஷித் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த மகேசும், கிஷோரும் அக்ஷித்தை காப்பாற்ற சென்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக மகேஷ், அக்ஷித், கிஷோர் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இந்த கூச்சல் சத்தத்தை கேட்ட மீனவர்கள், அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மகேஷ், அக்ஷித், கிஷோர் ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.இதுகுறித்து அறிந்த முல்கி போலீசாரும், தீயணைப்பு படைவீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படைவீரர்கள், மீனவர்களின் உதவியுடன் ஆற்றில் மூழ்கி இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பலியான 3 பேரின் உடல்களையும் பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.