ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஊர்வலம் பழ.நெடுமாறன்-வைகோ பங்கேற்பு

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஊர்வலம் நடந்தது. இதில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2017-07-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதால் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியே வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஆதரவாக செயல்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் அறிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 10-வது நாளாக நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தன.

இந்தநிலையில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற வேண்டும். அப்படி இல்லையென்றால் 10-ந் தேதி(நேற்று) அனைத்து கட்சி தலைவர்களுடன் கதிராமங்கலத்திற்கு சென்று மக்களை சந்தித்து பேசுவது என தஞ்சையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த அனைத்து கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாரையும் விடுதலை செய்யாததால் திட்டமிட்டபடி நேற்று கும்பகோணம் அருகே உள்ள சிவராமபுரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டு கதிராமங்கலத்திற்கு சென்றனர். இவர்களுடன் கதிராமங்கலம் கிராமமக்களும் ஊர்வலமாக வந்தனர். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனமே கதிராமங்கலத்தை விட்டு வெளியேறு என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங் கள் எழுப்பப்பட்டன.

இதில் கோவி.செழியன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, திரைப்பட இயக்குனர் கவுதமன், வக்கீல் கார்த்திகேயன், இந்திய கம்யூனிஸ்டு(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) மக்கள் விடுதலை நிர்வாகி பாலன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம்பாட்ஷா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கதலைவர் லெனின், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், பேராசிரியர் ஜெயராமனின் மனைவி சித்ரா மற்றும் பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் கதிராமங்கலம் அய்யனார்கோவில் திடலில் முடிவடைந்தது. பின்னர் அங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் செய்திகள்