சீன நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

சீன நாட்டு பொருட்களை புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு பள்ளி முதல்வர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2017-07-10 21:45 GMT

மும்பை,

சீன நாட்டு பொருட்களை புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு பள்ளி முதல்வர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா– சீனா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது. இரு நாட்டின் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பதற்றம் அதிகரித்து போர் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.

இந்தநிலையில் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் மும்பை பள்ளி முதல்வர்கள் சங்கத்தினர் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளனர். அதில் பள்ளி மாணவர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட பென்சில், பேனா, காம்பஸ் பாக்ஸ் போன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆசிரியர்கள் விளக்கமாக மாணவர்களிடம் கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி முதல்வர்கள் சங்க உறுப்பினர் பிரசாந்த் ரெட்டிஜி கூறியதாவது:–

நம் நாடு சந்திக்கும் பிரச்சினைகளை மாணவர்கள் தெரிந்து இருக்க வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான எழுது பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. எனவே சீன பொருட்களை நிராகரித்து அவர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தவேண்டும். இது நம்மால் நாட்டிற்கு செய்ய முடியும் ஒரு சிறிய காரியம் தான்.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பி உள்ளோம். மாணவர்கள் இடையே பள்ளிகள் தேசப்பற்றை விதைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை தாதர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் விலாஸ் கூறும்போது, ‘‘மாணவர்களிடம் சீனப் பொருட்களை வாங்காதீர்கள் என்று மட்டும் கூறினால் அவர்களுக்கு புரியாது. ஆசிரியர்கள் உலக பிரச்சினைகளை மாணவர்களிடம் வகுப்பறையில் பேச வேண்டும். உலக நடப்புகளை மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்