2013–ம் ஆண்டு இயற்றப்பட்ட சென்ட்ரல் சர்வீஸ் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

2013–ம் ஆண்டு இயற்றப்பட்ட சென்ட்ரல் சர்வீஸ் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கண்டோன்மெண்ட் ஊழியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2017-07-10 22:15 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்ட கண்டோன்மெண்ட் போர்டு ஊழியர் சங்க தலைவர் அசோகன், துணைத்தலைவர் பரமேஸ்ரவன், செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் குன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

இந்தியா முழுவதும் 62 கண்டோன்மெண்ட்டுகள் இயங்கி வருகின்றன. இவைகள் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு நில சேவை என்ற வாரியத்தின் கீழ் இயங்கி வருகிறது. வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட்டில் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

1937–ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் நிதி ஊழியர் சட்டம் என்ற அடிப்படையின் கீழ் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஊழியர்களின் ஊதியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கடந்த 1969–ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் ஊழியர்களின் ஊதியம் மாநில அரசின் ஊழியர்களுக்கு இணையான ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக துப்புரவு, மருத்துவம், கல்வி, பொறியியல் ஆகிய துறைகளை சார்ந்த பணியாளர்களின் ஊதியம் மாநில அரசின் ஊதியத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு துறையோடு போடப்பட்ட இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக திருத்தி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்பெறும் பல்வேறு சலுகைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறாமல் உள்ளது. இதனை கண்டித்து சம்மேளனமும், தொழிற்சங்கமும் பல ஆண்டுகளாக போராடியது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு நில சேவையின் கீழ் இயங்கும் 62 கண்டோன்மெண்ட்டுகளையும் ஒருங்கிணைத்து கண்டோன்மெண்ட் ஊழியர் ‘சென்ட்ரல் சர்வீஸ் சட்டத்தை’ பாதுகாப்பு துறை இயற்றியது. இந்த தீர்மானம் நிலுவையில் உள்ளது. 2013–ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் கண்டோன்மெண்ட் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் சென்னையில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவில் உள்ள அம்சங்கள் குறித்து எதிர்வரும் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று இந்த சட்டத்தினை அமல்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக அவர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்